Sunday, March 30, 2014

அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு.

ஒரு நாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார் அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொதுவான குளியலறைதான் இருந்தது. அப்பகுதிக்கு முல்லாவும் குளிப்பதற்காக வந்து சேர்ந்தார். அழுக்கான ஆடையை அணிந்திருந்த முல்லாவை அங்கு நின்ற யாரும் சரியாகக் கவனிக்கவில்லை அங்கிருந்த வேலைக்காரர்கள் கூட முல்லாவை அலட்சியமாக நடத்தினர்.

சீக்கிரம் குளித்துவிட்டு போகும்படி அவசரப்படுத்தினர். ஒருவாறாக குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். முல்லாவின் இந்நடத்தையினை சற்றும் எதிர்பார்க்காத அவ்வேலைக்காரர்கள் "இவர் பெரிய செல்வந்தர்
என்பதை மன்னமே தெரியாமல் இருந்து விட்டோமே முதலே தெரிந்திருந்தால் அவருக்குச் சில பணிவிடைகள் செய்துவிட்டு இன்னும் அதிகமான பொற்காசுகளை வாங்கியிருக்கலாமே..." என்று நினைத்தனர். இரண்டு நாட்கள் கழிந்தது.

மீண்டும் ஒருதடவை முல்லா அவ்விடத்திற்கு குளிப்பதற்காக வந்து சேர்ந்தார். இப்போது முல்லாவுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. முல்லாவிற்கு பணிவிடை செய்வதற்கு வேலைக்காரர்கள் முந்தியடித்தனர். ஒருவரை ஒருவர் போட்டியிட்டு முல்லாவுக்குப் பணிவிடை செய்தனர். அன்றைய தினம் முல்லா தங்களுக்கு ஆளுக்கு பத்து பொற்காசுகளாவது தருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் நினைத்தற்கு மாறாக முல்லா ஆளுக்கு ஒரு செப்புக்காசுகளை மாத்திரமே தந்தார்.

முல்லாவின் இச்செயற்பாட்டால் விரக்தி அடைந்த அவர்கள் முல்லாவிடமே கேட்டுவிட்டனர். "இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபச்சாரம் செய்தற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு...?" என்று கேட்டனர். இதற்கு முல்லா " நீங்கள் அன்று செய்த அலட்சியத்துக்கான பரிசுதான் இது இன்று செய்த உபச்சாரத்திற்கான பரிசுதான் நான் அன்றே உங்களுக்குத் தந்துவிட்டேன்" என்று கூறிவாறு நடையைக் கட்டினார். வேலைக்காரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அசடுவளிய நின்றனர்.

No comments:

Post a Comment